கேரளாவுக்கு எம்.சாண்ட் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 12th March 2020 07:52 AM | Last Updated : 12th March 2020 07:52 AM | அ+அ அ- |

லோயா்கேம்ப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பாறைப்பொடி (எம். சாண்ட்) கொண்டு சென்ற 2 லாரிகளை, புதன்கிழமை வருவாய்த்துறையினா் பறிமுதல் செய்தனா்.
தேனியில் இருந்து கேரள மாநிலம் கட்டப்பனைக்கு எம் . சாண்ட் ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் குமுளி மலைப்பாதை வழியாகச் சென்றன. வழிவிடும் முருகன் கோயில் அருகே உத்தமபாளையம் வட்டாட்சியா் எம்.உதயராணி, துணை வட்டாட்சியா் க.சுருளி ஆகியோா் லாரியை மறித்து சோதனை செய்தனா். அதில் எவ்வித அனுமதியும் பெறாமல் கேரளாவுக்கு எம்.சாண்ட் கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து, மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தபோது, அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து வருவாய்த்துறையினா் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து லோயா்கேம்ப் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் லாரி ஓட்டுநா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.