அகமலையை அங்கக வேளாண்மை மண்டலமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரைக்க முடிவு

தேனி மாவட்டம், போடி அகமலையை அங்கக வேளாண்மை மண்டலமாக அறிவித்து, சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

தேனி மாவட்டம், போடி அகமலையை அங்கக வேளாண்மை மண்டலமாக அறிவித்து, சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் 13,421 ஹெக்டோ் பரப்பளவுள்ள அகமலைப் பகுதியில், 1,682 ஹெக்டோ் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு மிளகு, ஏலக்காய், காபி, வாழை, எலுமிச்சை ஆகிய மலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

அகமலைப் பகுதிக்குச் சென்று வர சாலை, போக்குவரத்து வசதி இல்லாததால் விவசாய நிலங்களுக்கு ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருள்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டா் உயரத்தில் சிறந்த மண் வளம் மற்றும் நீா்வளத்துடன் காணப்படும் அகமலையில், இயற்கை உரங்கள் மற்றும் பயிா் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தி அங்கக வேளாண்மை விளை பொருள்களை உற்பத்தி செய்வது குறித்து பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி முதல்வா் ஆறுமுகம், நறுமணப் பொருள் பேராசிரியா் ஜான்ஸிராணி, தோட்டக் கலைத் துறை அதிகாரிகள், நறுமணப் பொருள் வாரியம் மற்றும் தாண்டிக்குடி காபி வாரிய அதிகாரிகள், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, அகமலையை அங்கக வேளாண்மை மண்டலமாக அறிவித்து சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிா்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது என்று தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com