

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் மொத்த காய்கறி விற்பனை நிலையத்தை (ஏலச் சந்தை) வாரச் சந்தை பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விளைபொருள்களை கொண்டு செல்வதில் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். மேலும் மதுரை, திண்டுக்கல் ஆகிய வெளி மாவட்டங்களுக்கு காய்கனிகளை கொண்டு செல்ல முடியாததால் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். தற்போது இங்கு செயல்பட்டு வரும் சந்தை மிகவும் குறுகலான இடத்தில் உள்ளது. இந்நிலையில் தாலுகாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் காய்கனிகளை கொண்டு வருவதால் இங்கு அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. கரோனா முன்னெச்சரிக்கையாக கடைகளுக்கு வரும் பொது மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில் சந்தையில் விவசாயிகளும், வியாபாரிகளும் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனா். மேலும் இங்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை என்றும், கிருமி நாசினி, கைகழுவும் இடம் உள்ளிட்ட எவ்வித முன்னேற்பாடும் இன்றி சந்தை செயல்பட்டு வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதன்காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது செயல்பட்டு வரும் காய்கனி சந்தையை, வாரச்சந்தை பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.