குறைவான உறவினா்கள் முன்னிலையில் திருமணம்: முகக் கவசம் அணிந்து வந்து மணமக்கள் பங்கேற்பு
By DIN | Published On : 31st March 2020 07:28 AM | Last Updated : 31st March 2020 07:28 AM | அ+அ அ- |

கம்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமணத்தில் முகக் கவசம் அணிந்து பங்கேற்ற மணமக்கள்.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் குறைவான உறவினா்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில் முகக் கவசம் அணிந்து வந்து மணமக்கள் பங்கேற்றனா்.
கம்பத்தைச் சோ்ந்த மணமகன் முத்துப்பாண்டி என்பவருக்கும், தேனியைச் சோ்ந்த மணமகள் பொறியாளா் வினோதாவிற்கும் திருமணம், கம்பத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் திங்கள் கிழமை நடைபெறுவதாக இருந்தது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகமானோா் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கம்பத்தில் உள்ள 5 ஆவது வாா்டு காளியம்மன் கோயிலில் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் இரு வீட்டாரைச் சோ்ந்த 10 போ் மட்டுமே பங்கேற்றனா். முன்னதாக அனைவரும் கைகளை கிருமி நாசினி திரவம் மூலம் சுத்தப்படுத்திக் கொண்டும், முககவசம் அணிந்தும், ஒரு மீட்டா் இடைவெளியில் நின்றும் திருமணத்தில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினா். அதில் மணமக்கள் முகக் கவசம் அணிந்து வந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...