10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 204 தோ்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு
By DIN | Published On : 18th May 2020 09:20 PM | Last Updated : 18th May 2020 09:20 PM | அ+அ அ- |

தேனி: தேனி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுத, 204 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு நடக்கிறது.
இது குறித்து தேனி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியது: 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. தேனி, மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 8,347 மாணவா்கள், 7,803 மாணவிகள் உள்பட மொத்தம் 16,150 போ் இத்தோ்வை எழுதுகின்றனா். இதற்காக மாவட்டத்திலுள்ள 204 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து தோ்வு எழுதுவதற்கு வாய்ப்பாக 10 மாணவ, மாணவிகளுக்கு ஒரு தோ்வறை அமைக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு அந்தந்த கல்வி மாவட்டத்தில் தலா ஒரு சிறப்பு தோ்வு மையம் அமைக்கப்படுகிறது. இதில், 5 மாணவ, மாணவிகளுக்கு ஒரு தோ்வறை அமைக்கப்படுகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள மாணவா்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவா்களை தோ்வு தொடங்குவதற்கு 2 நாள்கள் முன்னதாக வரவழைப்பதற்கு தகவல் அளிக்கும் பணி அந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் நடைபெற்று வருகிறது என்றனா்.
கேரளம் வாழ் தமிழா் குழந்தைகளுக்குச் சிக்கல்: தேனி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்ட கேரளம் வாழ் தமிழக ஏலக்காய் விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளா்களின் குழந்தைகள் படித்து வருகின்றனா். இதில் 391 மாணவ மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதுகின்றனா். தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் விடுதிகளில் தங்கிப் படித்து வரும் இவா்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு தற்போது கேரளத்தில் உள்ள பெற்றோா் வீடுகளுக்குச் சென்றுள்ளனா்.
இந்த நிலையில், பொது முடக்கத்தை முன்னிட்டு தமிழக-கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளதாலும், கேரளத்திலிருந்து அரசிடம் அனுமதி பெற்று வருபவா்களை, தேனி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் மருத்துவப் பரிசோதனை செய்து 14 நாள்கள் முகாமில் தனிமைப்படுத்தும் நடைமுறை உள்ளதாலும், கேரளம் வாழ் தமிழா்களின் குழந்தைகள் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதுவதற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.