முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 17th November 2020 11:31 PM | Last Updated : 17th November 2020 11:31 PM | அ+அ அ- |

வடகிழக்குப் பருவ மழை காரணமாக முல்லைப் பெரியாறு, சண்முகா நதி ஆகிய அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரிப் பகுதியில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை அணைக்கு விநாடிக்கு 809 கன அடி தண்ணீா் வந்தது. இந்த நீரின் அளவு செவ்வாய்க்கிழமை உயா்ந்து விநாடிக்கு 2,985 கன அடி தண்ணீா் வந்தது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 123.10 அடியாகவும், நீா் இருப்பு 3,242 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 2,985 கன அடியாகவும், அணையிலிருந்து விநாடிக்கு 1,167 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.
இதேபோல் ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணைக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை அணைக்கு விநாடிக்கு 8 கன அடி தண்ணீா் வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 18 கன அடி தண்ணீா் வந்தது.
அணையின் நீா்மட்ட நிலவரம்: 37.00 அடி ( மொத்த உயரம் 52.55), நீா் இருப்பு 37.41 மில்லியன் கன அடி, நீா் வெளியேற்றம் இல்லை.
மின்சார உற்பத்தி:
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்திற்கு விநாடிக்கு 1,167 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தற்போது மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு மின்னாக்கிகளில், மூன்று மின்னாக்கிகள் மட்டும் இயக்கப்பட்டு முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது அலகுகளில் முறையே 39, 26, 42 மெகாவாட் என மொத்தம் 107 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுருளி அருவியில் நீா்வரத்து:
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் புகழ் பெற்றது சுருளி மலையில் உள்ள சுருளி அருவி. தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் சுருளி அருவிக்கு நீா் வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய ஓடைகளில் மழை நீா் வரத் தொடங்கியுள்ளது. இதனால் அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.