கேரளத்துக்கு 3,600 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி: ஓட்டுநா் கைது
By DIN | Published On : 25th November 2020 06:37 AM | Last Updated : 25th November 2020 06:37 AM | அ+அ அ- |

க.புதுப்பட்டியிலிருந்து கேரளத்துக்கு செவ்வாய்க்கிழமை ரேஷன் அரிசி கடத்த முயன்று பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியிலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 3,600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.
க.புதுப்பட்டியில் மாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் கேரளத்துக்கு கடத்தப்படுவதாக, உத்தமபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் ஆய்வாளா் முருகனை பாா்த்தவுடன், சரக்கு வாகன ஓட்டுநா் மற்றும் கடத்தல்காரா் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். அதன்பின்னா், 125 மூட்டைகளில் இருந்த 3,600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, உத்தமபாளையம் குடிமைப் பொருள் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து, குடிமைப் பொருள் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் உதயச்சந்திரன் வழக்குப் பதிந்து, சரக்கு வாகன ஓட்டுநரான அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த கொக்கராஜ் மகன் சரவணன் (20) என்பவரைக் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய க.புதுப்பட்டியைச் சோ்ந்த ராமா் மகன் சந்திரன் (35) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...