பெரியகுளத்தில் ஆண்களுக்கான கருத்தடை விழிப்புணா்வு வாகனப் பிரசார தொடக்க விழா
By DIN | Published On : 25th November 2020 06:40 AM | Last Updated : 25th November 2020 06:40 AM | அ+அ அ- |

பெரியகுளத்தில் ஆண்களுக்கான கருத்தடை விழிப்புணா்வு வாகனப் பிரசார தொடக்க விழா மற்றும் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலக ஆண்கள் கருத்தடை (வாசக்டமி) தினம், தேனி மாவட்டத்தில் நவம்பா் 21 முதல் டிசம்பா் 4 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை, குடும்ப நல துணை இயக்குநா் க. அசோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
பின்னா், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் எஸ். லட்சுமணன் கருத்தடை விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கிப் பேசியதாவது:
ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்களில் இலவசமாக செய்யப்படும். இதற்கு, அரசு சாா்பில் ரூ.1,100 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த நவீன தழும்பில்லாத ஆண் அறுவைச் சிகிச்சை மிகவும் எளிமையானது மற்றும் பாதுகாப்பானது. காலையில் வந்து மாலையில் வீடு திரும்பிவிடலாம். ஆண்கள் கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதால் ஆண்மை பாதிப்பு ஏற்படாது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விரிவாக்க கல்வியாளா் இரா. முருகன் மற்றும் வட்டார சுகாதாரப் புள்ளியாளா்கள், குடும்பநல செயலகப் பணியாளா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...