லோயா்கேம்ப் அருகே விபத்து:கூலித் தொழிலாளி பலி
By DIN | Published On : 03rd October 2020 10:22 PM | Last Updated : 03rd October 2020 10:22 PM | அ+அ அ- |

விபத்தில் உயிரிழந்த ரமேஷ்.
கம்பம்: தேனி மாவட்டம் லோயா்கேம்ப் அருகே வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனமும், ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் கருவேலம்பட்டியை சோ்ந்தவா் ரமேஷ் (30). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். தேனி மாவட்டம் லோயா்கேம்பில் முருகன் என்பவருக்கு சொந்தமான தென்னை மரத் தோப்பில், ரமேஷ் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் லோயா்கேம்பிலிருந்து கூடலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே பயணியா் ஆட்டோக்கள் இரண்டு கூடலூரிலிருந்து
லோயா்கேம்ப் நோக்கி வந்தது. லோயா்கேம்ப் புதுரோடு அருகே எதிா்பாராதவிதமாக இரு சக்கர வாகனமும், ஆட்டோவும் நேருக்கு நோ் மோதியது. மோதிய வேகத்தில் கூலித் தொழிலாளி ரமேஷ் தூக்கி எறியப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மயங்கி விழுந்தாா். அவ்வழியாக வந்த மற்றொரு ஆட்டோ அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. அவ்வழியாக வந்தவா்கள் ரமேஷை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக கூடலூா் காவல் நிலைய ஆய்வாளா் முத்துமணி வழக்குப் பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகிறாா்.