கம்பம்: ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி கவுன்சிலர்கள் முற்றுகை
By DIN | Published On : 02nd August 2021 03:02 PM | Last Updated : 02nd August 2021 03:02 PM | அ+அ அ- |

சுருளிப்பட்டி ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்.
கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுருளிப்பட்டி ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள், முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது சுருளிப்பட்டி ஊராட்சி, இதன் தலைவராக நாகமணி வெங்கடேசன், துணைத்தலைவராக ஜெயந்திமாலா மாயாண்டி உள்ளனர். ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், வார்டு உறுப்பினர்கள் குறைகளை கூறினால் தலைவரின் கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், குடிநீர் குழாய் இணைப்பு, வீட்டுமனை வரைபட அனுமதி, ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்டவைகளுக்கு ஊராட்சி தலைவரின் கணவர் நேரடியாக அதிக பணம் பெறுவதாகவும் ஊராட்சி செயலர் இதற்கு உடந்தையாக இருப்பதாக பல்வேறு புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சிகளின் இயக்குனருக்கும் அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் ஜூலை.30 ல் மாவட்ட ஆட்சியர் சுருளிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு ஆய்வுக்கு வந்தார், அவரது காரை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இந்நிலையில் சுருளிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் எம்.அறிவழகன், வி. சாந்தி, வி.ராதிகா, எஸ். சுதா, எம். முத்துக்குமார், எம்.ராஜலட்சுமி, ஜெ. மணிகண்டன், எம். கன்னையன், எஸ். சதீஷ்குமார், ஓ. பொம்மு ராஜ் ஆகிய 10 வார்டு உறுப்பினர்களும் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்தனர்.
வட்டார ஊராட்சி அலுவலர் கோதண்டபாணியை நேரில் சந்தித்து ஊராட்சி தலைவர் நாகமணி வெங்கடேசன் மீது 6 மாதங்களாக நடவடிக்கை எடுக்கக் கோரி பல புகார் மனுக்கள் கொடுத்தும் ஏன் மெத்தனம் காட்டுகிறீர்கள் என்று கேட்டனர். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் பற்றிய அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த வார்டு கவுன்சிலர்கள் ஊராட்சி அலுவலக வளாகத்தில் ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்யவும், ஊராட்சி தலைவர் மற்றும் செயலர் மீது நடவடிக்கை எடுக்கவும், கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி தலைவரின் கணவர் வெங்கடேசனை கைது செய்யவும் கோரி கோஷமிட்டனர்.
தரையில் அமர்ந்தபடி உடனடியாக தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகாந்தன், போராட்டம் நடத்தியவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்து விட்டோம், இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனாலும் கலைந்து போக மறுத்தனர், இதற்கிடையில் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் வார்டு கவுன்சிலர்களிடம் போராட்டத்தை கைவிட்டு செல்லுங்கள் முறையாக அனுமதி பெற்று போராட்டம் நடத்துங்கள் என்று கூறினார்.
அதன்பின்பு வார்டு கவுன்சிலர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஊராட்சித் தலைவி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் முற்றுகை மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்து கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.