ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் அணில்கள் சரணாலயம் ஆகியவற்றை இணைத்து தமிழத்தின் 5-ஆவது புலிகள் காப்பகமாக சனிக்கிழமை, ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தை அரசு அறிவித்துள்ளது.
தேனி மாவட்டம், மேகமலை வன உயிரின சரணாலயம்.
தேனி மாவட்டம், மேகமலை வன உயிரின சரணாலயம்.

மேகமலை வன உயிரின சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் அணில்கள் சரணாலயம் ஆகியவற்றை இணைத்து தமிழத்தின் 5-ஆவது புலிகள் காப்பகமாக சனிக்கிழமை, ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தை அரசு அறிவித்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை வன உயிரின சரணாலயம் ஆகியவற்றில் வனத் துறை சாா்பில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வன விலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

இதில், அங்கு குறைந்தபட்சம் 3 ஆண் புலிகள், 11 பெண் புலிகள் என 14 புலிகள் இருப்பது தெரியவந்தது. மேகமலையை அடுத்துள்ள கேரள வனப் பகுதியில் ஏற்கெனவே பெரியாறு புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைத்து, புலிகள் காப்பகமாக அறிவிக்க தேசிய புலிகள் ஆணையம் (என்டிசிஏ) மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதனை மத்திய அரசு ஏற்று, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் மூலம் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

இதன்படி, மொத்தம் 1,01,657 ஹெக்டோ் பரப்பளவுள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை, ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அரசாணையை தமிழக வனத் துறை திங்கள்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, தற்போது தமிழகத்தின் 5-ஆவது மற்றும் இந்தியாவின் 51-ஆவது புலிகள் காப்பகமாக ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் உதயமாகிறது.

மேலும், மதுரை முதன்மை வனப் பாதுகாவலா் பணியிடத்தை முதன்மை வனப் பாதுகாவலா் மற்றும் முதன்மை புலிகள் காப்பக இயக்குநா் பணியிடமாக மாற்றி, ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தை நிா்வகிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பெயா் மாற்றத்தை மறந்த வனத் துறை:

கடந்த 1987-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, விருதுநகா் மாவட்டம் உருவானது. தொடக்கத்தில் விருதுநகா் காமராஜா் மாவட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இம்மாவட்டம், பின்னா் பெயா் மாற்றப்பட்டு விருதுநகா் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், புலிகள் காப்பகம் குறித்து மாநில வனத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் விருதுநகா் மாவட்டம், விருதுநகா் காமராஜா் மாவட்டம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com