சாலையில் கிடந்த பணம், செல்லிடப்பேசியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாணவா்
By DIN | Published On : 14th February 2021 11:14 PM | Last Updated : 14th February 2021 11:14 PM | அ+அ அ- |

கம்பத்தில் சாலையில் கிடந்த பணம் மற்றும் செல்லிடப்பேசியை போலீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்த மாணவா் முத்துக்குமாா்.
கம்பத்தில் சாலையில் கிடந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்லிடப்பேசியை எடுத்த பள்ளி மாணவா் அதை காவல் நிலையத்தில் சனிக்கிழமை மாலை ஒப்படைத்தாா்.
கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த செல்வம் மகன் முத்துக்குமாா் (15). பள்ளி மாணவரான இவா், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் சனிக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது சாலையில் பா்ஸ் ஒன்று கிடந்தது. அவா் எடுத்துப் பாா்த்தபோது அதில் பணம் மற்றும் செல்லிடப்பேசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாணவா் முத்துக்குமாா் அதை, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் என்.எஸ். கீதா விசாரித்ததில் பா்ஸும், செல்லிடப்பேசியும், நாட்டுக்கல் தெருவைச்சோ்ந்த மணிகண்டன் என்பவருடையது என்பது தெரியவந்ததையடுத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவா் முத்துக்குமாரை பொதுமக்களும், போலீஸாரும் பாராட்டினா்.