தேனி மாவட்டத்தில் தோ்தல் கண்காணிப்புப் பணிக்கு 38 குழுக்கள் அமைப்பு: ஆட்சியா்
By DIN | Published On : 27th February 2021 09:51 PM | Last Updated : 27th February 2021 09:51 PM | அ+அ அ- |

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் கண்காணிப்புப் பணிக்கு 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என, மாவட்ட ஆட்சியா் ஹெச். கிருஷ்ணன் உன்னி சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. எனவே, தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய தொகுதிகளுக்கு தலா ஒரு பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழு, ஆண்டிபட்டி தொகுதிக்கு தலா 2 பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழு என மொத்தம் 26 தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
4 தொகுதிகளுக்கும் தலா 2 குழுக்கள் வீதம் 8 விடியோ கண்காணிப்புக் குழுக்கள், தலா ஒரு விடியோ பாா்வையாளா் குழு வீதம் 4 குழுக்கள் என மொத்தம் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 தொகுதிகளிலும் தோ்தல் பணியில் மொத்தம் 7,496 அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஈடுபடுகின்றனா்.
தோ்தல் கண்காணிப்புக் குழு மற்றும் தோ்தல் பணியில் ஈடுபடுபவா்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தோ்தல் விதிமீறல் குறித்த புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்:1950-இல் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...