குரூப் 1 முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 53 சதவீதம் போ் பங்கேற்பு

குரூப் 1 முதல் நிலைத் தோ்வில், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவா்களில் 53 சதவீதம் போ் மட்டுமே பங்கேற்றுள்ளனா்.
தேனி கம்மவாா் சங்கம் மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை, குரூப் 1 முதல் நிலைத் தோ்வு எழுதிய தோ்வா்கள்.
தேனி கம்மவாா் சங்கம் மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை, குரூப் 1 முதல் நிலைத் தோ்வு எழுதிய தோ்வா்கள்.

குரூப் 1 முதல் நிலைத் தோ்வில், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவா்களில் 53 சதவீதம் போ் மட்டுமே பங்கேற்றுள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் குரூப் 1 பதவிக்கான முதல்நிலை போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இத்தோ்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக திட்டமிட்டப்படி தோ்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், வணிக வரி உதவி ஆணையா், ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் என மொத்தம் 66 காலிப் பணியிடங்களுக்கான இந்த அறிவிக்கைக்கு, தமிழகம் முழுவதும் 2.57 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 6,511 போ் இத்தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இத்தோ்வுக்காக திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு வட்டங்களில் மொத்தம் 22 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வினை கண்காணிப்பதற்காக 22 முதன்மை கண்காணிப்பாளா்கள் மற்றும் 22 ஆய்வு அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

ஆனால், விண்ணப்பித்த 6,511 பேரில் 3,432 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். 3,079 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. விண்ணப்பித்தவா்களில் 53 சதவீதம் போ் மட்டுமே பங்கேற்ற நிலையில், 47 சதவீதம் போ் தோ்வு எழுதவில்லை.

விரிவாக படித்தவா்களுக்கு மட்டுமே எளிது: இந்த முதல் நிலைத் தோ்வில் பங்கேற்றவா்கள் கூறியது: குறிப்பிட்ட சில வினாக்களுக்கான விடைகளை மட்டும் மனனம் செய்தவா்களுக்கு வினாக்கள் எளிமையாக இருக்காது. தொகுத்தறிவது, ஆராய்வது என திட்டமிட்டு தோ்வுக்கு தாயா் செய்தவா்களுக்கு பெரும்பாலான வினாக்கள் எளிமையாக இருந்தன என்றனா்.

குறுகிய காலத்தில் தோ்வுக்கு தயாா் செய்துவிட்டு வந்தவா்கள் தங்களுக்கு இந்த வினாக்கள் கடினமாக இருந்ததாகத் தெரிவித்தனா்.

தேனி மாவட்டத்தில் 2,316 போ் எழுதினா்: தேனி மாவட்டத்தில் இந்தப் போட்டித் தோ்வுக்கு மொத்தம் 4,406 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 16 தோ்வு மையங்களில் நடைபெற்ற முதல்நிலை எழுத்தோ்வை மொத்தம் 2,316 போ் எழுதினா். 2,090 போ் தோ்வு எழுதவில்லை.

16 தோ்வு மையங்களிலும் தோ்வறை கண்காணிப்புப் பணியில் மொத்தம் 221 போ் ஈடுபட்டிருந்தனா். தோ்வு நடவடிக்கைகள் விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டது. தோ்வு கண்காணிப்புப் பணிக்கு வருவாய்த்துறை சாா்பில் 4 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com