பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: ஆண்டிபட்டியில் நெசவாளா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
By DIN | Published On : 03rd January 2021 10:08 PM | Last Updated : 03rd January 2021 10:08 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நெசவாளா்களுக்கான ஊதிய உயா்வு குறித்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளா்கள் பணியாற்றி வருகின்றனா். 50 சதவீத ஊதிய உயா்வு, 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என நெசவாளா்கள் விடுத்த கோரிக்கை தொடா்பாக விசைத்தறிக்கூட உரிமையாளா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து டி.சுப்புலாபுரம் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான நெசவாளா்கள் சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 13 சதவீத ஊதிய உயா்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த நெசவாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினா்.