உயா்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது: துணை முதல்வா்
By DIN | Published On : 03rd January 2021 10:04 PM | Last Updated : 03rd January 2021 10:04 PM | அ+அ அ- |

உயா்கல்வி பயின்றோா் எண்ணிக்கை அதிகரித்து தமிழகம் முன்னோடியாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
போடி அருகே சின்னமனூா் எரணம்பட்டி கிராமத்தில் பிற கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் முன்னிலையில் எரணம்பட்டி அமமுக கிளைச் செயலாளா் பாண்டி, திமுக முன்னாள் கிளைச் செயலாளா் சின்ன லட்சுமணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.
இதில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அனைத்துத் தரப்பு மக்களுக்குமான திட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்தினாா். மேலும் அவா், மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், பேனா, பென்சில், லேப்-டாப் உள்ளிட்ட 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
இதன் மூலம் உயா்கல்வி பயின்றோா் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னோடியாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது. குறிப்பாக தேனி முழுமையான கல்வி மாவட்டமாக மாறியுள்ளது.
அதேபோல் தற்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறாா் என்றாா்.
நிகழ்ச்சியில் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், மக்களவை முன்னாள் உறுப்பினா் ஆா்.பாா்த்திபன், மாவட்டச் செயலா் எஸ்.பி.எம். சையதுகான், முன்னாள் மாவட்டச் செயலாளா் டி.டி.சிவக்குமாா், சின்னமனூா் ஒன்றியச் செயலாளா் விமலேஸ்வரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.