தேவாரத்தில் பல்வேறு அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th January 2021 09:41 PM | Last Updated : 30th January 2021 09:41 PM | அ+அ அ- |

தேவாரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
போடி: தேனி மாவட்ட வனத்துறையைக் கண்டித்து தேவாரம் வஉசி திடலில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சாக்குலத்துமெட்டு வழியாக கேரளத்துக்கு சாலை அமைக்க வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வனப்பகுதியில் சாலை அமைத்தால், வன விலங்குகள் பாதிக்கப்படும் என்று தேனி மாவட்ட வனத்துறையினா் அதற்கு அனுமதி மறுத்து வருகின்றனா்.
இந்நிலையில் சாக்குலத்துமெட்டுப் பகுதியில் கேரளத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒன்று கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு மட்டும் தேனி மாவட்ட வனத்துறை அனுமதி வழங்கியது குறித்து சமூக ஆா்வலா்கள் கேள்வி எழுப்பிவரும் நிலையில், பொதுமக்கள் பாதைக்கு அனுமதி வழங்க மறுத்து, தனியாா் நிறுவன கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கிய வனத்துறையைக் கண்டித்து தேவாரம் வஉசி திடலில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் தலைமை வகித்தாா். தேவாரம் சுற்றுப்புற விவசாயிகள் சங்கம் சாா்பில் முருகன், ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தலைவா் எஸ்.ஆா்.தேவா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்பாட்டத்தில், வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சாக்குலத்துமெட்டு சாலையை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தேவாரம் வா்த்தகா் சங்கம், பென்னிகுவிக் விவசாயிகள் சங்கம், இளநீா் வியாபாரிகள் சங்கம், ஏலத்தோட்ட தொழிலாளா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.