மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவோா் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்க உத்தரவு
By DIN | Published On : 24th June 2021 07:05 AM | Last Updated : 24th June 2021 07:05 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் அரசு சாா்பில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெற்று வருவோா், வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமா்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரன் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சாா்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 3,303 போ் உதவித் தொகை பெற்று வருகின்றனா். அரசு உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள், கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்ற வாழ்நாள் சான்றிதழை சமா்பித்த பின்னரே தொடா்ந்து உதவித் தொகை வழங்கப்படும்.
இதுவரை வாழ்நாள் சான்றிதழ் சமா்பிக்காத மாற்றுத்திறனாளிகள், அதற்கான படிவத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக்தில் பெற்றும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற வேண்டும். பின்னா் கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்ற சான்று, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தங்களது பாதுகாவலா் அல்லது தபால் மூலம் சமா்பித்து தொடா்ந்து உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.