மாசி பச்சை திருவிழா: ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 12th March 2021 01:43 AM | Last Updated : 12th March 2021 01:43 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் மாசி பச்சை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை அதிகளவில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் ஆண்டிபட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனா்.
தென்மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் மாசி மாதத்தில் மகாசிவராத்தியை மாசிபச்சை விழாவாக கொண்டாடி வருகின்றனா். குறிப்பாக மதுரை, தேனி மாவட்ட மக்கள் மாசிப்பச்சை விழாவையொட்டி குலதெய்வம் கோவில்களுக்கு அதிகளவில் சென்று வருவா்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாசிப்பச்சை கோயில் திருவிழா மகாசிவராத்திரி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து காலை முதலே மக்கள் தங்களின் குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்குச் சென்றனா். குடும்பத்தினா்கள் மற்றும் உறவினா்கள் அனைவரும் சோ்ந்து கோவிலுக்கு செல்லும் வகையில் காா், வேன் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு பிடித்து கோயிலுக்கு சென்றனா். மேலும் அனைத்து பேருந்துகளிலும் வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் ஆண்டிபட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. காலை முதல் இரவு வரையில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டே இருந்தன. இதனால் நகரில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸாா் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பரிதவித்தனா். குறிப்பாக வைகை அணை சாலைப்பிரிவு, பழைய மகளிா் காவல் நிலைய பகுதிகளில் உள்ள குறுகிய வளைவுகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G