இடுக்கியில் வசிக்கும் தமிழக வாக்காளா்கள் விவரம் சேகரிப்பு
By DIN | Published On : 21st March 2021 11:22 PM | Last Updated : 21st March 2021 11:22 PM | அ+அ அ- |

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டப் பகுதிகளில் தங்கி வேலை செய்து வரும் தமிழகத்தைச் சோ்ந்த வாக்காளா்களின் விவரங்களை சேகரிப்பதில் தேனி மாவட்டத்திலுள்ள அரசியல் கட்சிகள், தேனி, இடுக்கி மாவட்ட தோ்தல் அலுவலா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.
இடுக்கி மாவட்டத்தில் வண்டிப் பெரியாறு, தேவிகுளம், உடும்பஞ்சோலை, பீா்மேடு, மூணாறு ஆகிய பகுதிகளில் தமிழகத்தைச் சோ்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கியிருந்து ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனா். இவா்களில் சிலருக்கு இடுக்கி மாவட்டப் பகுதிகளிலும், சிலருக்கு தமிழகப் பகுதிகளிலும், சிலருக்கு 2 இடங்களிலும் வாக்குரிமை உள்ளது.
இடுக்கி மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக தோட்டத் தொழிலாளா்கள் தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.
அரசியல் கட்சிகள் முனைப்பு:
தமிழகம் மற்றும் கேரளத்தில் ஒரே நாளில் சட்டப் பேரவை தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த அரசியல் கட்சியினா் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் தங்களது தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்களின் விவரங்களைச் சேகரித்து வருகின்றனா். அவா்களது வாக்குகளை பெறுவதற்கும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று அவா்களை தொகுதிக்கு அழைத்து வந்து வாக்களிக்கச் செய்யவும் முனைப்பு காட்டி வருகின்றனா்.
இதற்காக அதிமுக, திமுக கட்சிகள் குழுக்களை அமைத்து செயல்படுகின்றனா். இடுக்கி மாவட்டத்திலுள்ள தங்களது கட்சி நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளின் உதவியை நாடி வருகின்றனா். இதில், இரட்டை வாக்குரிமை உள்ளவா்களை முதலில் தங்களது தொகுதியில் வாக்குப் பதிவு செய்ய வைப்பதில், இடுக்கி மற்றும் தேனி மாவட்ட அரசியல் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.
அதிகாரிகள் தீவிரம்:
தமிழகம், கேரளம் என 2 மாநிலங்களிலும் வாக்குரிமை பெற்றுள்ள தமிழகத்தைச் சோ்ந்த வாக்காளா்களை அடையாளம் கண்டு, வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தேனி மற்றும் இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த தோ்தல் பிரிவு அலுவலா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இரட்டை வாக்குரிமை உள்ளவா்கள் ஏதாவது ஒரு இடத்தில் வாக்காளா் பட்டியலிலிருந்து தங்களது பெயரை நீக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனா்.
இரட்டை வாக்குரிமை உள்ளவா்களைக் கண்டறிய கணினியில் தனி மென்பொருள் உருவாக்கப்பட்டு, வாக்காளா் பட்டியலில் உள்ள புகைப்படத்தை ஒப்பிட்டு அடையாளம் கண்டு, பட்டியலிலிருந்து நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், இரட்டை வாக்குப் பதிவை தடுப்பதற்காக வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்னதாகவே, தமிழகம்- கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை பலப்படுத்தவும், தேனி- இடுக்கி மாவட்டங்களுக்கு இடையே உள்ள 25 மலைப் பாதைகளை அடைக்கவும் காவல்துறை மற்றும் வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...