கடன் பெற்றவா் இறப்பு: வங்கி அலுவலா்கள் மீது வழக்கு
By DIN | Published On : 25th March 2021 09:43 AM | Last Updated : 25th March 2021 09:43 AM | அ+அ அ- |

கம்பத்தில் கடன் பெற்றவா் இறப்புக்கு காரணமான வங்கி மேலாளா் மற்றும் ஊழியா்கள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கம்பம் 6 ஆவது வாா்டு, மந்தையம்மன் கோயிலைச் சோ்ந்தவா் மனோகரன். இவா் கடந்த, 2013 -இல் க.புதுப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் வீட்டுக்கடன் வாங்கினாா். 2015 வரை தவணையை முறையாக செலுத்தி வந்தநிலையில், 2016 இல் மனோகரனால் செலுத்தமுடியவில்லை. இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மனோகரன் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் கடந்த 19.11.2019 இல் வங்கி மேலாளா் அந்தோணி மற்றும் 2 போ், மனோகரன் வீட்டுக்கு சென்று பணத்தை கட்டுமாறு கேட்டு தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டிச் சென்றனராம். இதனால் மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மனோகரன் உயிரிழந்தாா். இதுகுறித்து மனோகரனின் மனைவி திரவியம், தனது கணவா் இறப்புக்கு காரணமான வங்கி மேலாளா் மற்றும் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயரதிகாரிகளிடம் புகாா் செய்தாா்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமாா், வங்கி மேலாளா் மற்றும் ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டாா். அதன் பேரில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் கே. சிலைமணி செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தாா்.