பெரியகுளம் அருகே மேலும் ஒரு கரோனா: சித்த மருத்துவ மையம் தொடங்க ஏற்பாடு
By DIN | Published On : 13th May 2021 09:18 AM | Last Updated : 13th May 2021 09:18 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே வடவீரநாயக்கன்பட்டியில் கரோனா சித்த மருத்துவ நல மையம் செயல்பட்டு வரும் நிலையில், நல்லகருப்பன்பட்டியில் கூடுதலாக கரோனா சித்தா மருத்துவ நல மையம் தொடங்குவதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம், போடி, உத்தமபாளையம், கம்பம் அரசு மருத்துவமனைகளிலும், தேனி என்.ஆா்.டி. நினைவு அரசு பழைய மருத்துவமனை, போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதி, தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதி, தப்புக்குண்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு புதிய கட்டடம் ஆகிய இடங்களில் உள்ள கரோனா நல மையங்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வடவீரநாயக்கன்பட்டியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு புதிய கட்டடத்தில் கரோனா சித்தா சிகிச்சை பிரிவு தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதில், தற்போது மொத்தம் 156 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக கோம்பை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு புதிய கட்டடத்தில் கரோனா நல மையமும், நல்லகருப்பன்பட்டியில் உள்ள மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் கரோனா சித்த மருத்துவ நல மையமும் தொடங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.