போடிமெட்டு மலைச் சாலையில் பாறை சரிவு: 3 ஆவது நாளாக கனரக வாகனங்களுக்கு தடை
By DIN | Published On : 13th May 2021 09:17 AM | Last Updated : 13th May 2021 09:17 AM | அ+அ அ- |

போடிமெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை பாறை சரிவுகளை அகற்றும் பணி.
போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவு ஏற்பட்டதால் 3 ஆவது நாளாக கனகர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
போடிமெட்டு மலைச்சாலையில் 6 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ஆகாயப் பாறை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாறை சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. திங்கள்கிழமை அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் பாறைகளை அகற்ற முயன்றனா். ஆனால் சாலையில் விரிசல் ஏற்பட்டு இருந்ததாலும், ஏற்கெனவே சரிவு ஏற்பட்ட பகுதி அருகில் மேலும் சில பெரிய பாறைகள் சரியும் நிலையில் இருந்ததாலும் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து சாலையில் இருந்த சில சிறிய பாறைகளை மட்டும் அகற்றிவிட்டு, இரு சக்கர வாகனங்கள், காா் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை கோட்டப் பொறியாளா் ஆய்வுக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து புதன்கிழமை கோட்ட பொறியாளா் சேதுராஜன், தேனி உதவி கோட்டப் பொறியாளா் குமணன், போடி உதவி பொறியாளா் முத்துராமன் ஆகியோா் சரிவு ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்தனா். அப்போது சரியும் நிலையில் உள்ள பாறைகளை வியாழக்கிழமை அகற்றுவது, பின்னா் சாலையை சீரமைத்து வாகனங்களை அனுமதிப்பது என முடிவு செய்தனா். இதனால் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு போடி வழியாக சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.