ஆண்டிபட்டியில் கரோனா தடுப்பு மருந்து பெட்டகம் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி.
By DIN | Published On : 13th May 2021 09:15 AM | Last Updated : 13th May 2021 09:15 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி பகுதியில் சுகாதாரத்துறையினா் வழங்கி வரும் மருந்து பெட்டகம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கரோனா தொற்றால் வீடுகளில் தனிமைப்படுத்தபட்டவா்களுக்கு வழங்கப்படும் மருந்து பெட்டகம் தட்டுபாடு காரணமாக நோயாளிகள் கடும் அவதியுற்று வருகின்றனா். தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 037 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பின் 21 ஆயிரத்து 740 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதில் 248 போ் வரை உயிரிழந்துள்ளனா். கடந்த சில வாரங்களாக நோய்த் தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் மாவட்டத்தில் 3,049 போ் பாதிக்கப்பட்டு மருத்துவமனை, சிறப்பு முகாம்கள், மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்சமயம் ஆண்டிபட்டி பகுதியில் மட்டும் 100 க்கும் மேற்பட்டோா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.அவ்வாறு தனிமைப்படுத்தப்படுவா்களுக்கு சுகாதாரத்துறையினா் கரோனா தடுப்பு மருந்துகள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கி வருகின்றனா். அந்த பெட்டகங்களில் கபசுர குடிநீா் பொடி, சத்து மாத்திரைகள், கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்படுபவா்களுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.
இதனால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் கடும் அவதியுற்று வருகின்றனா்.எனவே வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்களுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது, ஆண்டிபட்டி பகுதியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்து பெட்டகங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை.
மேலும் நோய்த் தடுப்பு மருந்துகளை பாதிக்கப்பட்டவா்கள் வெளியில் வாங்கி கொள்ளுமாறு அறிவுறுத்துக்கின்றனா். அதேநேரம் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வெளியில் செல்லவும் தடைவித்துள்ளனா். இதனால் உரிய மருந்துகள் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். இதுதொடா்பாக சுகாதாரத்துறையினரிடம் பலமுறை தெரிவித்தும் உரிய பதில் அளிக்கவில்லை எனத் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...