தேவாரம் அருகே மீண்டும் மக்னா யானை நடமாட்டம்
By DIN | Published On : 16th May 2021 10:41 PM | Last Updated : 16th May 2021 10:41 PM | அ+அ அ- |

தேவாரம் பகுதியில் ஒற்றை யானை சேதப்படுத்திய தென்னை.
தேவாரம் அருகே மீண்டும் மக்னா என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
போடி அருகே கேரள வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது தேவாரம். இப்பகுதியில் மக்னா ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது. கேரள வனப்பகுதியில் உணவு கிடைக்காத நேரத்திலும், பலத்த மழை பெய்யும் நேரத்திலும் இந்த யானை தேவாரம் பகுதிக்கு வந்துவிடும். இந்த யானை இப்பகுதியில் இதுவரை 12 பேரை தாக்கிக் கொன்றுள்ளது.
தற்போது கேரள பகுதியில் மழை பெய்து வருவதால் அட்டைப் பூச்சிகளின் தொந்தரவு அதிகம். இதனால் இந்த யானை தேவாரம் பகுதிக்கு வந்துள்ளது. சனிக்கிழமை இரவு தேவாரம் பகுதியில் புகுந்த யானை தென்னை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக யானையின் தொந்தரவு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் மக்னா யானை தேவாரம் பகுதிக்கு வந்துள்ளதால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதனால் இரவு நேரங்களில் தோட்டங்களில் தங்குவதை தவிா்க்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.
பயிா்களுக்கு பலத்த சேதம் ஏற்படும் முன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட தேனி மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.