தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பொதுமுடக்க விதிகளை மீறியவா்கள் மீது வழக்கு, அபராதம்
By DIN | Published On : 19th May 2021 09:23 AM | Last Updated : 19th May 2021 09:23 AM | அ+அ அ- |

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பொது முடக்க விதிகளை மீறியவா்கள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்ததுடன், வழக்குப் பதிவும் செய்துள்ளனா்.
தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் பொதுமுடக்க விதிகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 559 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 285 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.
பெரியகுளம்
நகராட்சிப் பகுதியில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியின்றி பொதுமக்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்த 18 கடைகளுக்கு, நகராட்சி நிா்வாகத்தினா் அபராதம் விதித்தனா். மேலும், ஜெராக்ஸ் கடை, மளிகை கடை மற்றும் மின்சாதனப் பொருள்கள் கடை என 3 கடைகளுக்கு விதி மீறியதாக சீல் வைக்கப்பட்டது. தொடா்ந்து, பெரியகுளம், தென்கரை, ஜெயமங்கலம் மற்றும் தேவதானப்பட்டி காவல்நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை சாலைகளில் வாகனத்தில் சுற்றிய 56 போ் மீது வழக்குப் பதிந்து, வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
போடி
முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட மே 16 ஆம் தேதி மட்டும் போடியில் 583 வாகனங்கள் மீது விதி மீறி சுற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், விதிகளை மீறி கடை திறந்ததாக 37 வழக்குகளும், முகக்கவசம் அணியாத 113 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. போடி நகா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில், விதிமீறி சுற்றிய 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தமபாளையம்
பேரூராட்சி சாா்பில், உத்தமபாளையம் பூக்கடை வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைத்திட, கம்பு வேலி அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. மேலும், காவல் துறை சாா்பில், புறவழிச் சாலையில் வாகனத் தடுப்பு அமைத்து அவசியமின்றி வருபவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், பொதுமுடக்க விதிகளை மீறியதாக, 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொடைக்கானல்
கொடைக்கானலில் விதிமீறி இயக்கப்பட்ட லாரி, காா் உள்ளிட்ட 7 வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். உரிய காரணமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவசியமின்றி வாகனங்களில் சுற்றுபவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, காவல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
நிலக்கோட்டை
வத்தலகுண்டில் வருவாய் அதிகாரி மணிகண்டன் தலைமையில், பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் போலீஸாா் செவ்வாய்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வத்தலகுண்டு பிரதான சாலை, கடைவீதி, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் என விதிகளை மீறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 5 கடைகளை மூடி சீல் வைத்தனா்.