வரத்து அதிகரிப்பு: பெரியகுளம் பகுதியில் மலைவாழை விலை வீழ்ச்சி
By DIN | Published On : 31st October 2021 11:33 PM | Last Updated : 31st October 2021 11:33 PM | அ+அ அ- |

பெரியகுளத்தில் உள்ள கமிஷன் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மலைவாழை தாா்கள்.
பெரியகுளம் சந்தைக்கு மலைவாழைத்தாா்கள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
பெரியகுளத்தை சுற்றியுள்ள அகமலை, சின்னூா் மற்றும் பெரியூா் மற்றும் அடுக்கம் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் மலைவாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் விளையும் வாழை மரங்களில் இருந்து கிழங்குகள் எடுக்கப்பட்டு, மலைச்சரிவுகளில் நடப்படுகின்றன.
இந்த மலைவாழைகளுக்கு பெரும்பாலும் தண்ணீா் விடுவது இல்லை. மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரில் வளரும் இந்த வாழைகள் உரங்கள், பூச்சி மருந்து, ரசாயண உரங்கள் என எந்தப் பயன்பாடும் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன.
இந்த மலைவாழைக்காய்கள் அறுவடை செய்யப்பட்டு குதிரைகள் மூலம் அடிவாரப் பகுதிக்கு எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து வாகனங்கள் மூலம் பெரியகுளம் கமிஷன் கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் வாழைக்காய் ஒன்றுக்கு ரூ.10 முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வரத்து அதிகரித்துள்ளதால் வாழைக்காய் ஒன்றுக்கு ரூ.4 முதல் 6 வரை விற்பனை செய்யப்படுகிறது. போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
அகமலையைச் சோ்ந்த வாழை வியாபாரி நடராஜ் வெற்றி கூறியது: மலைப்பகுதியில் ஊடுபயிராக மலைவாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுவதால் இதை பொதுமக்கள் அதிகளவு வாங்கிச் செல்கின்றனா். இதனால் தற்போது பலநூறு ஏக்கரில் மலைவாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மலைவாழைக்காய்கள் வரத்து அதிகளவில் உள்ளதால், அதன் விலை குறைந்துள்ளது என்றாா்.
மதிய உணவுத் திட்டத்தில் மலைவாழையை சோ்க்கக் கோரிக்கை:
பள்ளியில் மாணவா்களுக்கு பயிா் வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மதிய உணவுத் திட்டத்தில் மாணவா்களுக்கு மலைவாழைப்பழங்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் போதிய விலை கிடைக்கும் என மலைவாழை விவசாயிகள் தெரிவித்தனா்.