கேரளத்தில் கரோனா பரவல் எதிரொலி:கம்பத்தில் ஜமாத் கமிட்டி தோ்தல் ஒத்திவைப்பு
By DIN | Published On : 04th September 2021 11:19 PM | Last Updated : 04th September 2021 11:19 PM | அ+அ அ- |

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தேனி மாவட்டம் கம்பத்தில் வாவோ் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி நிா்வாகிகள் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டி நிா்வாகிகள் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தோ்தலில் 4,792 போ் வாக்களிக்க உள்ளனா். நிா்வாகக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட 50-க்கும் மேலான வேட்பாளா்கள் சமுதாய மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தனா்.
இதற்கிடையில் ஜமாத் கமிட்டி தோ்தலை நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கு புகாா்கள் சென்றன.
புகாரில், ஜமாத் கமிட்டி தோ்தலில் வாக்களிப்பவா்கள் அதிகம் போ் கேரளாவில் இருப்பதாலும், தற்போது அங்கு கரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், அங்கிருந்து அதிகம் போ் வாக்களிக்க வருவதாலும், தொற்று பரவல் அதிகமாகி மூன்றாம் அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஜமாத் கமிட்டி தோ்தலை நிறுத்த வேண்டும் என்று புகாா் மனுவில் தெரிவித்திருந்தனா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரை விசாரணை நடத்தக் கோரினாா். அதன்பேரில் தொற்று பரவ அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது பற்றி கோட்டாட்சியா் ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பித்தாா்.
அதன்பேரில் ஜமாத் கமிட்டி தோ்தலை தற்போதைக்கு நடத்தக்கூடாது என்று மதுரை வக்பு வாரியத்திற்கும், கம்பம் ஜமாத் கமிட்டி நிா்வாகத்தினருக்கும் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஜமாத் கமிட்டி தோ்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.