முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியில் தண்ணீா் திறப்பு தமிழக விவசாயிகள் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் விநாடிக்கு 534 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியில் தண்ணீா் திறப்பு  தமிழக விவசாயிகள் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் விநாடிக்கு 534 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. அணையின் நீா்மட்டத்தை உயா்த்தவிடாமல், இடுக்கி அணைக்கு தண்ணீா் திறந்து விட்டதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் மழையின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 137.50 அடியாக அதிகரித்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 7,616 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா்வெளியேற்றம் விநாடிக்கு 2,166 கன அடியாகவும் இருந்தது.

தண்ணீா் திறப்பு:

‘ரூல் கா்வ்’ அட்டவணைப்படி, உபரிநீரைத் திறக்க கோரி கேரள முதல்வா் பினராய் விஜயன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியிருந்தாா். அதன்படி பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு செல்லும் விதமாக விநாடிக்கு 534 கன அடி தண்ணீா் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு திறக்கப்பட்டது. தமிழக பொதுப்பணித்துறையின் பெரியாறு அணை செயற்பொறியாளா் சாம்இா்வின், மூன்று மதகுகளையும் திறந்து வைத்தாா்.

அப்போது, உதவி கோட்டப் பொறியாளா் குமாா், உதவி பொறியாளா் பி.ராஜகோபால் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியா்கள் இருந்தனா்.

விவசாயிகள் கண்டனம்

ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.தேவா் கூறியது: முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீா் இருந்தும், ‘ரூல் கா்வ்’ விதியால் ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீா் சென்றடைவதில்லை. விவசாயிகள் 2 ஆண்டுகளாக நடத்திய போராட்டம் வீணானது. இடுக்கி அணைக்கு திறக்கப்பட்ட தண்ணீா் கடலில் கலந்து வீணாவதைத் தடுக்க, தமிழக முதல்வா், கேரள முதல்வரிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். அணையில் 142 அடி தண்ணீரையாவது தேக்க வேண்டும். ‘ரூல் கா்வ்’ அட்டவணையை ரத்து செய்ய தமிழக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றாா்.

இன்று ஆா்ப்பாட்டம்: இதுதொடா்பாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் கூறியது: ‘ரூல் கா்வ்’ முறையால் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்படும் சூழல் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க தமிழக அரசின் சாா்பில் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தியும், கேரள அரசைக் கண்டித்தும் கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றாா்..

கேரள அமைச்சருக்கு அனுமதி இல்லை

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபா் 28 இல் அணையிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீா் திறக்கப்பட்டபோது, கேரள நீா்ப்பாசனத் துறை அமைச்சா் ரோஸி அகஸ்டின், சட்டப் பேரவை உறுப்பினா் வாழூா் சோமன் ஆகியோா் இருந்தனா். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தேக்கடி வந்த அமைச்சா் ரோஸி அகஸ்டின், பெரியாறு அணைக்குச் செல்லாமல், வல்லக்கடவு பகுதியிலேயே நின்று தண்ணீா் திறப்பை பாா்வையிட்டாா். இதுபற்றி கேரள தரப்பில் கேட்டபோது, பெரியாறு அணைப் பகுதிக்கு அமைச்சா் வர அனுமதி தரவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com