போடியில் பெண் வனக் காவலர் கொலை: ஆயுதப் படை காவலர் சரண்

​போடியில் சனிக்கிழமை நள்ளிரவு பெண் வனக் காவலரை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு ஆயுதப் படை காவலர் மதுரை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
திருமுருகனுடன் சரண்யா எடுத்துக் கொண்ட புகைப்படம்
திருமுருகனுடன் சரண்யா எடுத்துக் கொண்ட புகைப்படம்


​போடியில் சனிக்கிழமை நள்ளிரவு பெண் வனக் காவலரை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு ஆயுதப் படை காவலர் மதுரை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மதுரை சதாசிவம் நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பொன்பாண்டி மனைவி சரண்யா (27). இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

போடியில் வனத் துறை அலுவலகம் அருகே ரமேஷ் என்பவரது வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்கு வருடம் முன்பு இவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகளும் சரண்யாவின் பெற்றோர் வீட்டில் உள்ளனர்.

தனியாக வசித்து வந்த சரண்யாவை கொலை செய்துவிட்டதாக மதுரை அனுப்பானடியை சேர்ந்த வேலாயுதம் மகன் திருமுருகன் (27) என்பவர் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் ஞாயிரன்று அதிகாலை சரணடைந்தார். 

இதனையடுத்து கீரைத்துறை காவல் துறையினர் தகவலின் பேரில் போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் போடியில் சரண்யா வசித்து வந்த வீட்டில் சென்று பார்த்தபோது சரண்யா கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிந்தது.

விசாரணையில் சரண்யாவும், திருமுருகனும் மதுரைப் பகுதியில் வசித்து வந்த நிலையில் இருவரும் காவல் துறையில் சேருவதற்காக பயிற்சி வகுப்புக்குச் சென்றதில் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். திருமுருகனுக்கும் திருமணமான நிலையில் சரண்யாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதால் திருமுருகனின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து திருமுருகன் அடிக்கடி போடிக்கு வந்து சரண்யா வீட்டில் தங்கிவிட்டுச் செல்வது வழக்கம்.

சனிக்கிழமை இரவிலும் திருமுருகன் வழக்கம்போல் வந்துள்ளார். அவர்களுக்குள் திருமணம் செய்வது தொடர்பாக பேசியபோது இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் திருமுருகன் சரண்யாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். திருமுருகன் மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் சிறப்பு காவலராகப் பணிபுரிந்து வருகிறார். 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போடி நகர் காவல் நிலைய காவல் துறையினர் திருமுருகனைக் கைது செய்ய மதுரை விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் காவல் துறை மோப்ப நாய் மூலம் விசாரணை செய்ததில் கொலை நடந்த வீட்டிலிருந்து ஓடிய நாய் போடி பேருந்து நிலையம் வரை சென்றது. மேலும் கைரேகை நிபுணர்களும் கைரேகை தடயங்களைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com