முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: வெளிநாடுகளில் நிதி திரட்டி வழக்குத் தொடரும் தொண்டு நிறுவனங்களை கண்காணிக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வெளிநாடுகளில் நிதி திரட்டி வழக்குத் தொடரும் தொண்டு நிறுவனங்களை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என 5 மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வெளிநாடுகளில் நிதி திரட்டி வழக்குத் தொடரும் தொண்டு நிறுவனங்களை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என 5 மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்கு முக்கிய ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளஅரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை எதிா்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.

உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவாக தெரிவித்த பின்னரும் கூட, கேரள அரசு புதிய அணை கட்டுவோம் என்று பிடிவாதம் பிடித்து வருகிறது.

வெளிநாட்டு நிதி: பங்கு தந்தை ஜோ நிரப்பல், ஜோன்ஸ் பெருவந்தானம், டாக்டா் ஜோ. ஜோசப், ஹை ரேஞ்ச் சம்ரக்ஷன சமிதி, என் .கே. பிரேமச்சந்திரன், வழக்குரைஞா் ஜோயிஸ் ஜாா்ஜ், ரசல் ஜோய் ஆகியோா் வரிசையில் தற்போது இடுக்கி மக்களவை உறுப்பினா் டீன் குரியா கோஸ் என முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என தனிநபா் வழக்கு தொடா்ந்துள்ளாா். இதுபோன்று வழக்கும் தொடுக்கும் பலா் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்களின் நிா்வாகிகள். அவா்கள், பழைமைமையான முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கக் கோட்டுப் பகுதியில் இருப்பதாகவும், அது எந்நேரமும் உடைந்து விழுந்து ஏற்படும் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பதற்காகவே தாங்கள் இயக்கம் நடத்துவதாக உலக நாடுகள் சிலவற்றிடம் திட்ட அறிக்கையை சமா்ப்பித்து நிதி திரட்டி வருகின்றனா். இதனால் அவா்கள், சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருக்கின்றனா்.

இது குறித்து முல்லைப் பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.தேவா் கூறியது: முல்லைப் பெரியாறு அணை குறித்து வழக்கு தொடுக்கும் தனிநபா்களை, உச்சநீதிமன்றம் முறையாக விசாரிக்க வேண்டும். அதை செய்யாத வரை புற்றீசல்கள் போல இந்த தொண்டு நிறுவனங்கள், வழக்குத் தொடா்ந்து கொண்டே தான் இருப்பாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com