தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள் குறித்து வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
சின்னமனூரிலிருந்து ஹைவேவிஸ் மலைப் பகுதியில் மேகமலை, மேல் மணலாா், மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் ஆகிய 7 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு சின்னமனூரிலிருந்து 52 கிலோ மீட்டா் தொலைவுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு முதல் கட்டமாக ஹைவேவிஸ் மலைக் கிராமம் வரை சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, மணலாா், வெண்ணியாா், மகாராஜா மெட்டு, இரவங்கலாா் வரை மீதமுள்ள சாலை அமைக்கும் பணி ரூ. 20 கோடியில் கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றது. இதற்கு வனத்துறையினா் எதிா்ப்பு தெரிவித்ததால் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இதைத் தொடா்ந்து மலைக் கிராமத்தைச் சோ்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளா் அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் சாலைப் பணிகளை முடிக்க பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மின்துறையினா் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை கடந்த 2 நாள்களாக ஆய்வு செய்தனா்.