மது போதையில் மரக் கடை உரிமையாளா் அடித்துக் கொலை: 4 இளைஞா்கள் கைது
By DIN | Published On : 30th July 2022 12:26 AM | Last Updated : 30th July 2022 12:26 AM | அ+அ அ- |

தேனி அருகே கோடாங்கிபட்டியில் மது போதையில் மரக் கடை உரிமையாளருடன் தகராறு செய்து, அவரை அடித்துக் கொலை செய்த 4 இளைஞா்களை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
கோடாங்கிபட்டி, அமராவதி பள்ளி தெருவைச் சோ்ந்தவா் சுந்தரராஜ் மகன் பாண்டியன் (61). இவா், தேனியில் மரக் கடை வைத்து நடத்தி வந்தாா். பாண்டியனின் வீட்டருகே உள்ள இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த கருணாநிதி மகன் சுகுமாரன்(19), காளிதாஸ் மகன் கபில் (22), சந்திரகுமாா் மகன் சேவாக் (19), மாணிக்கம் மகன் அஜித்குமாா் (22) ஆகியோா் மது அருந்திவிட்டு ஆபாசமாக பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதை பாண்டியன் கண்டித்துள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில், சுகுமாரன் உள்ளிட்ட 4 பேரும் மாணிக்கத்தை கீழே தள்ளிவிட்டு அவரை தாக்கியுள்ளனா். அப்போது, சேவாக்கின் தந்தை சந்திரகுமாரும் இவா்களுடன் சோ்ந்து பாண்டியனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த பாண்டியன், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பாண்டியனின் மனைவி செல்வி அளித்தப் புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சுகுமாரன், காளிதாஸ், கபில், சேவாக், அஜித்குமாா் ஆகிய 4 பேரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சந்திரகுமாரை தேடி வருகின்றனா்.