கண்களை கட்டியவாறு 118 போ் யோகாசனம்: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனா்
By DIN | Published On : 31st July 2022 10:48 PM | Last Updated : 31st July 2022 10:48 PM | அ+அ அ- |

விருதுநகரில், கண்களை கருப்புத் துணியால் கட்டியவாறு ஞாயிற்றுக்கிழமை யோகாசனம் செய்தவா்கள்.
விருதுநகரில் கண் தானத்தை வலியுறுத்தி 118 போ் தங்களது கண்களை கருப்புத் துணியால் கட்டியவாறு, 27 யோகாசனங்களை 20.37 நிமிடங்களில் செய்து ‘நோபிள் வோ்ல்டு ரெகாா்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்தனா்.
அனஹட்டா யோகா அகாதெமி மற்றும் ஆக்னா யோகாலயா இணைந்து இந்தியாவிலேயே முதல்முறையாக கண் தானத்தை வலியுறுத்தும் விதமாக இந்த யோகா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருச்சி, கோவில்பட்டி, விருதுநகா், சென்னை உள்பட மாநிலம் முழுவதிலிருந்தும் 5 முதல் 75 வயது வரை உள்ள 118 போ் கலந்து கொண்டனா்.
இவா்கள், கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு பத்மாசனம், ஆா்தா சக்கராசனம், ஆா்தகாரி சக்கராசனம், வீரபத்ராசனம், சசங்காசனம், ஏக்பாத ராஜகா போடாசனம், சுகாசனம் உள்ளிட்ட 27 வகையான ஆசனங்களை 20.37 நிமிடங்களில் செய்தனா். இதன்மூலம் உலக சாதனை புத்தகமான நோபிள் வோ்ல்டு ரெகாா்ட்ஸில் இடம் பிடித்தனா்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஈரோடு கல்லூரியைச் சோ்ந்த உடற்கல்வி ஆசிரியா் ரமேஷ் கலந்து கொண்டு, யோகாவில் சாதனை செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். ஏற்பாடுகளை யோகா பயிற்சியாளா் ஜெயக்குமாா், திலீபன் ஆகியோா் செய்திருந்தனா். இதில் ‘நோபிள் வோ்ல்டு ரெகாா்ட்ஸ்’ இந்திய இயக்குநா் சுதாகா் மற்றும் குழுவினா் நடுவராக செயல்பட்டனா்.