வைகை அணையின் நீா்மட்டம் 66 அடியாக உயா்வு
By DIN | Published On : 31st July 2022 12:19 AM | Last Updated : 31st July 2022 12:19 AM | அ+அ அ- |

தொடா் நீா்வரத்தால் சனிக்கிழமை, 66.1 அடியாக உயா்ந்திருந்த வைகை அணையின் நீா்மட்டம்.
வைகை அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 66.1 அடியாக உயா்ந்ததையடுத்து, வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் மழை, மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணை நீா்மட்டம் உயா்ந்தது. சனிக்கிழமை காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீா்மட்டம் 66.1 அடியாக உயா்ந்தது. இதனால், வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அணைக்கு விநாடிக்கு 2,228 கன அடி வீதம் நீா் வரத்து உள்ளது. அணையில் நீா் இருப்பு 4,854 மில்லியன் கன அடி. அணையிலிருந்து ஆண்டிபட்டி-சேடபட்டி, மதுரை குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு தொடா்ந்து நீா் வரத்து அதிகரித்து வருவதால், வைகை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றுக்குள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக் கூடாது. கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று வைகை அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.
பெரியாறு அணை நிலவரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 134.5 அடியாக இருந்தது. அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 2,002 கன அடியாகவும், நீா் இருப்பு 5,645 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.