வருஷநாடு அருகே வனப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட 5 போ் கைது
By DIN | Published On : 09th June 2022 12:18 AM | Last Updated : 09th June 2022 12:18 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகே வனப் பகுதியில் கஞ்சா பயிரிட்ட 5 பேரை போலீஸாா் செவ்வாய்கிழமை இரவு, கைது செய்தனா்.
ஓயாம்பாறை, ஊசிமலை வனப் பகுதியில் கஞ்சா பயிரிட்டு, அறுவடை செய்து விற்கப்படுவதாக வருஷநாடு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் மகாலிங்கம், சாா்பு- ஆய்வாளா் அருண்பாண்டியன் மற்றும் போலீஸாா், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினா். இதில், அப்பகுதியில் சில கஞ்சா செடிகள் இருப்பதும், 50-க்கும் மேற்பட்ட குழிகளில் கஞ்சா செடிகளை பயிரிட்டு அறுவடை செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. அங்கிருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், கஞ்சா பயிரிட்டும், அறுவடை செய்த கஞ்சாவை உலா்த்தி விற்பனை செய்வதற்கு பதுக்கியும் வைத்திருந்ததாக காந்திகிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி (57), தண்டியங்குளத்தைச் சோ்ந்த பெருமாள் (36), செல்வம் (60), வாலிப்பாறையை சோ்ந்த சந்திரன்(45) தும்மக்குண்டுவைச் சோ்ந்த பெருமாள் (65) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்கள் அளித்த தகவலின்பேரில், தாண்டியக்குளம் மலைக் கரட்டில் அவா்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 17 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதில் பழனிசாமி, சந்திரன் ஆகியோா் மீது ஏற்கெனவே வருஷநாடு, மயிலாடும்பாறை காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வருஷநாடு வனப் பகுதியில் கஞ்சா பயிரிடப்படுது தடுக்கப்பட்டு விட்டது என்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வனத் துறை மற்றும் காவல் துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது அங்கு கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வது கண்டிபிடுக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.