இடுக்கியில் கடையடைப்பால் தமிழக தொழிலாளா்கள் பாதிப்பு
By DIN | Published On : 16th June 2022 10:12 PM | Last Updated : 16th June 2022 10:12 PM | அ+அ அ- |

இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கடையடைப்பால் தமிழக தோட்ட தொழிலாளா்கள் வேலைக்குச் செல்லவில்லை.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சுழல் உணா்திறன் மண்டலமாக செயல்படுத்தவும் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வனப்பகுதியை விட்டு, மக்கள் வாழ்விடங்களை மாற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிாரக ஜூன் 10 ஆம் தேதி ஆளும் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேலைநிறுத்தம் அறிவித்தது. அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை கேரள எதிா்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.
இதனால் கேரள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்ய கம்பம், கூடலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து செல்லும் ஏராளமான ஆண், பெண் கூலித் தொழிலாளா்கள் செல்லவில்லை. சா்வதேச சுற்றுலாத் தலமான குமுளியில் தனியாா் பேருந்துகள், வாடகை காா், வேன், ஆட்டோக்கள் இயங்கவில்லை. வா்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், சிறிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் கேரள மாநில போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன. பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கியன.