பேரூராட்சிகளில் எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ரூ. 97 லட்சம் ஊழல்: உதவி இயக்குநா், 10 செயல் அலுவலா்கள் மீது வழக்கு

தேனி மாவட்டத்திலுள்ள 10 பேரூராட்சிகளில் கடந்த 2019-20-ஆம் ஆண்டு எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ரூ. 97 லட்சத்து 33 ஆயிரம் ஊழல் செய்ததாக பேரூராட்சி பெண் உதவி இயக்குநா், 10 செயல் அலுவலா்கள், 2 ஒப்பந்ததாரா

தேனி: தேனி மாவட்டத்திலுள்ள 10 பேரூராட்சிகளில் கடந்த 2019-20-ஆம் ஆண்டு எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ரூ. 97 லட்சத்து 33 ஆயிரம் ஊழல் செய்ததாக பேரூராட்சி பெண் உதவி இயக்குநா், 10 செயல் அலுவலா்கள், 2 ஒப்பந்ததாரா்கள் என மொத்தம் 13 போ் மீது தேனி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி, தென்கரை, வீரபாண்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலச்சொக்கநாதபுரம், பூதிப்புரம், தேவதானப்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் கடந்த 2019-20-ஆம் ஆண்டு எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜன், காவல் ஆய்வாளா் ஜெயப்ரியா ஆகியோா் விசாரணை நடத்தினா்.

இதில், 10 பேரூராட்சிகளிலும் 1,300 எல்.இ.டி பல்புகளை தலா ரூ.9,987 வீதம் மொத்தம் ரூ.ஒரு கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 100-க்கு வாங்கியதில், கூடுதலாக பல்பு ஒன்றுக்கு ரூ.7,487 வீதம் மொத்தம் ரூ.97 லட்சத்து 33 ஆயிரத்து 100 ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது.

இதனடிப்படையில், அப்போதைய பேரூராட்சி உதவி இயக்குநா் விஜயலட்சுமி, அப்போதைய பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஆண்டிபட்டி பாலசுப்பிரமணியம், தென்கரை மகேஸ்வரன், வீரபாண்டி செந்தில்குமாா், க.புதுப்பட்டி ஆண்டவா், உத்தமபாளையம் பாலசுப்பிரமணி, கோம்பை ஜெயலட்சுமி, மேலச்சொக்கநாதபுரம் மணிகண்டன், பூதிப்புரம் காா்த்திகேயன், தேவதானப்பட்டி கணேசன், ஓடைப்பட்டி பசீா்அகமது, க.புதுப்பட்டியைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்கள் ரவி, அவரது மனைவி ஜமுனாரவி என 13 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கடந்த 2019-20-ஆம் ஆண்டு தேனி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜலட்சுமி, தற்போது திருநெல்வேலி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து விடுமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com