கடும் வெப்பத்தால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ: ஆட்சியா்
By DIN | Published On : 18th March 2022 09:48 PM | Last Updated : 18th March 2022 09:48 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடும் வெப்பம் நிலவுவதால் காட்டுத் தீ ஏற்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் விளக்கம் அளித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மொத்தம் 1,090.84 சதுர கி.மீ., பரப்பளவில் வனப் பகுதி உள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் வனப் பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுகிறது. வனப் பகுதியில் தீ பரவாமல் இருக்க வனத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், வன எல்லையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் தீ வைப்பதால், வனப் பகுதியில் தீ பரவி அதனை அணைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. வன நிலங்களை அடுத்துள்ள நிலங்களிலும், வனப் பகுதி அருகிலும் தீ வைப்பதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும். வனப் பகுதிக்குள் சமூக விரோதிகள் நுழைந்தாலோ, தீ பரவ காரணாக இருந்தலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வனப் பகுதியில் தீ வைப்பு மற்றும் தீ பரவல் சம்பவங்கள் தெரியவந்தால் பொதுமக்கள் தேனி மாவட்ட வன அலுவலகம், தொலைபேசி எண்: 04546-252552, பேரிடா் மேலாண்மை மைய கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 435 4409 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...