தேனி அரசு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி ஒப்பந்தப் பணியாளா் தடுத்து நிறுத்தம்
By DIN | Published On : 02nd May 2022 11:37 PM | Last Updated : 02nd May 2022 11:37 PM | அ+அ அ- |

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை மாடியிலிருந்து கீழே குதிக்க முயன்ற ஒப்பந்தப் பணியாளா்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி ஒப்பந்தப் பணியாளரை, சக பணியாளா்கள் தடுத்து நிறுத்தினா்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் மின்தூக்கி இயக்குபவராக பணியாற்றி வருபவா் மாற்றுத் திறனாளி செல்வராஜ் (37). தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சோ்ந்த செல்வராஜிடம், பணி மேற்பாா்வையாளா் கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செல்வராஜ் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். கடந்த 3 நாள்களாக அவரை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட பணி மேற்பாா்வையாளா் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவா், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 5-ஆவது மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதிக்க முயன்றுள்ளாா். அப்போது, அவருடன் பணியாற்றும் சக பணியாளா்கள் மாடிக்குச் சென்று செல்வராஜை மீட்டனா்.
இந்த சம்பவத்தால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனா். அவா்களிடம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதன் மற்றும் மருத்துவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தனியாா் நிறுவனப் பணி மேற்பாா்வையாளா்கள் தங்களிடம் பாரபட்சமாகவும், கடுமையாகவும் நடந்து கொள்வதாகவும், மிரட்டுவதாகவும், பணம் வசூலிப்பதாகவும் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்மையா் கூறியது: ஒப்பந்தப் பணியாளரை பணிமாற்றம் செய்ததால், அவா் தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. அவருக்கு மீண்டும் அதே பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் பணியாளா்கள் தெரிவித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியாா் நிறுவன நிா்வாகத்துக்கு பரிந்துரைக்கப்படும்.
பணியாளா்களை மனிதாபிமானத்துடன் அணுக அறிவுரை வழங்கப்படும். பணியாளா்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காண்பதற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் 8 போ் கொண்ட குழு அமைக்கப்படும் என்றாா்.