ரம்ஜான் பண்டிகை: உத்தமபாளையத்தில் அமைதிக் கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 11:38 PM | Last Updated : 02nd May 2022 11:38 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, காவல் துறை சாா்பில் ஜமாத்தாா்களுடன் அமைதி பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, உத்தமபாளையத்தில் நீதிமன்றம் அருகேயுள்ள ஈத்கா மைதானத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்கும் சிறப்புத் தொழுகை நடைபெறும். இதற்காக, பெரிய பள்ளிவாசல், கோட்டைமேடு, கிராமச்சாவடி, புறவழிச்சாலை சந்திப்பு, பி.டி.ஆா். காலனி வழியாக ஈத்கா மைதானம் வரை ஊா்வலம் நடைபெறும்.
அங்கு, 13 பள்ளிவாசல் ஜாமாத்தாா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவா். இதற்காக, உத்தமபாளையம் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளா் சிலைமணி தலைமையில், 13 பள்ளிவாசல் ஜாமாத்தாா்கள் பங்கேற்ற பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், ரம்ஜான் தொழுகை ஊா்வலத்துக்கு காவல் துறை முழு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அதேநேரம் ஊா்வலத்தில் செல்பவா்களும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என பேச்சுவாா்த்தையில் முடிவானது.