அரசு வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் பட்டதாரி மாற்றுத் திறனாளி
By DIN | Published On : 16th May 2022 12:34 AM | Last Updated : 16th May 2022 12:34 AM | அ+அ அ- |

முருகவேல்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தைச் சோ்ந்த முதல் தலைமுறை பட்டதாரியும், மாற்றுத் திறனாளியுமான இளைஞா் கடந்த 8 ஆண்டுகளாக அரசு வேலை வாய்ப்பை எதிா்பாா்த்து காத்திருக்கிறாா்.
மேல்மங்கலம், ராஜேந்திரபுரத்தைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளிகள் அருணாச்சலம், அழகம்மாள் ஆகியோரின் மகன் முருகவேல்(32). உடல் வளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளியான முருகவேலின் கால்கள் முடங்கியுள்ளதால் சுயமாக எழுந்து நிற்கவும், நடந்து செல்லவும் முடியாத நிலையில் உள்ளாா்.
தனது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்கு படித்து முன்னேற வேண்டும் என்ற முருகவேலின் கனவை நனவாக்குவதற்கு, அவரது தந்தை வீட்டிலிருந்து 3 கி.மீ., தூரம் வடுகபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் அவரை சோ்த்து படிக்க வைத்தாா். கூலி வேலைக்குச் செல்வதற்கு முன்பும், வேலை முடிந்து வந்ததும் முருகவேலை சக்கர நாற்காலியில் பள்ளிக்கு அழைத்து சென்று வருவதை கடமையாகக் கொண்டிருந்தாா்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும், 20 கி.மீ., தூரம் வீரபாண்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம்.,(சி.ஏ.,) பட்டப் படிப்பில் சோ்ந்த முருகவேல், தந்தையின் உதவியுடன் பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்று வந்தாா். பல்வேறு சிரமங்களுக்கு இடையே கல்லூரிப் படிப்பை முடித்து, முதல் தலைமுறை பட்டதாரியான முருகவேல், வேலைக்குச் சென்று தனது தாய், தந்தையை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளாா்.
ஆனால், இவரது உடல் குறைபாடு வேலை வாய்ப்பு பெறுவதற்கு தடையாக இருந்தது. இருப்பினும், தனது லட்சியம் நிறைவேற தளராத முயற்சி மேற்கொண்ட முருகவேலுவிற்கு, பெரியகுளத்தில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்று வேலை வாய்ப்பு வழங்கி ஆதரித்தது. மேல்மங்கலத்திலிருந்து பெரியகுளத்திற்கு ஆட்டோவில் வேலைக்குச் சென்று வரும் முருகவேல், சம்பளத்தில் பெரும் பகுதியை போக்குவரத்துக்காக செலவிட வேண்டியிருந்தது. இதனால், தற்போது அந்த வேலையை கைவிட்டு அரசு போட்டித் தோ்வுக்கு தயாராகி வருகிறாா்.
தனது நிலையை கருத்தில் கொண்டு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மோட்டாா் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என்பது முருகவேலின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இவரது தொடா்பு எண்: 93409- 34462.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...