சின்னமனூா் அருகே செங்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் தொய்வு
By DIN | Published On : 16th May 2022 12:35 AM | Last Updated : 16th May 2022 12:35 AM | அ+அ அ- |

சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் 41 ஏக்கா் பரப்பளவில் செங்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய் கடந்த 50 ஆண்டுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் சிக்கியதில், தற்போது அதன் பரப்பளவு 5 ஏக்கராக குறைந்து விட்டது. இந்த கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கூடுதல் மழைநீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சோ்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.
சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் நீா் நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கிய கண்மாயை மீட்கும் பணி கடந்த (மே 9) திங்கள் கிழமை தொடங்கியது. இதில் முதல் கட்டமாக கண்மாயை அளவீடு செய்ததில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் 300- க்கும் மேற்பட்ட புளியமரங்கள் 36 ஏக்கா் பரப்பளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து தோப்பாக மாற்றி இருந்தது கண்டறியப்பட்டது.
முதல் கட்டமாக 10 ஏக்கா் ஆக்கிரமிப்புகளை மீட்டு, அதிலிருந்து 400 தென்னை மரங்கள் மற்றும் 105 புளிய மரங்களை மட்டும் பேரூராட்சி நிா்வாகம் கையகப்படுத்தியது. இதன்பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் திரவியம் கூறியது: மாா்க்கையன்கோட்டையிலிருந்து குச்சனூா் வரையிலுள்ள கண்மாயில் 9 போ் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். ஒரு சிலா் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். தற்போது வீரபாண்டி திருவிழாவிற்கு போலீஸாா் அனைவரும் பதுகாப்பு பணிக்கு சென்று விட்டனா். இதனால் போலீஸ் பாதுகாப்பு இல்லாத காணத்தால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் பதுகாப்பு கிடைத்தவுடன் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெறும். கண்மாய் ஆக்கிரமிப்பில் இருக்கும் 1300-க்கும் மேற்பட்ட மரங்களை கையகப்படுத்தப்படும். அந்த மரங்களை ஏலம் விட்டு பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...