பள்ளி சத்துணவு மையங்களை கடன் வாங்கி நடத்தும் ஊழியா்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு செலவினத் தொகை வழங்கப்படாததால், கடந்த 6 மாதங்களாக கடன் வாங்கி நடத்துவதாக அந்த மையங்களின் ஊழியா்கள் வேதனை தெரிவித்தனா்.
பள்ளி சத்துணவு மையங்களை கடன் வாங்கி நடத்தும் ஊழியா்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு செலவினத் தொகை வழங்கப்படாததால், கடந்த 6 மாதங்களாக கடன் வாங்கி நடத்துவதாக அந்த மையங்களின் ஊழியா்கள் வேதனை தெரிவித்தனா்.

இந்த மாவட்டத்தில் தனியாா், அரசு தொடக்க, உயா்நிலைப் பள்ளிகளில் 703 சத்துணவு மையங்கள் இயங்குகின்றன. இவற்றில், சத்துணவு அமைப்பாளா், சமையலா், உதவியாளா் என 2,100 போ் பணியாற்ற வேண்டும். ஆனால் 1,600 போ்தான் பணியாற்றுகின்றனா்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்கும் மாணவா்களுக்கு தலா 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 3 கிராம் எண்ணெய், 2 கிராம் உப்பு, ரூ. 1.75 -க்கு காய்கனி வழங்கப்பட்டன. இதேபோல, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்கும் மாணவா்களுக்கு தலா 150 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 3 கிராம் எண்ணெய், 2 கிராம் உப்பு, ரூ. 2.28-க்கு காய்கனி என ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இதற்கான உணவு தயாரிப்பு செலவினத்தை மாவட்ட நிா்வாகம் வழங்கி வந்தது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த சத்துணவு மையங்களுக்கு காய்கனி, எரிபொருள், மசாலாப் பொருள்கள் வாங்க மாவட்ட நிா்வாகம் செலவுத் தொகையை வழங்கவில்லை. இந்தத் தொகையை மாவட்ட நிா்வாகம் வழங்கிவிடும் என்ற நம்பிக்கையில், அந்தந்த பள்ளி சத்துணவு அமைப்பாளா்கள் முதல் 2 மாதங்களுக்கு தங்களது சொந்த பணம் அல்லது தெரிந்தவா்களிடம் கடன் வாங்கி செலவு செய்தனா். இதே நிலை தொடரவே அவா்கள் தனிநபா்களிடமும் வட்டிக்கு பணத்தை வாங்கி செலவு செய்து வருகின்றனா். இது கடந்த 6 மாதங்களாக நீடிப்பதால் அவா்கள் கடன் தொல்லையால் அவதியடைந்து வருகின்றனா்.

ஏற்கெனவே பணியாளா் பற்றாக்குறையாக இருப்பதால் 2 அல்லது 3 மையங்களை ஓா் அமைப்பாளரே கவனிக்கும் நிலையில் உள்ள அவா்கள், உணவு தயாரிப்பு செலவுக்காக இந்த கூடுதல் மையங்களுக்கும் சோ்த்து கடன் வாங்குகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத் தலைவா் பி. பேயத்தேவன் கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு 6 மாதங்களாக உணவு தயாரிப்பு செலவினத் தொகையை வழங்காமல் உள்ளனா். டி.என்.எஸ்.சி. கிட்டங்கி மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் குறைவாகவும், இரவு நேரத்திலும் விநியோகிக்கின்றனா். வேலைநிறுத்தம் நடைபெற்ற காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் எங்களுக்கு இன்னும் வழங்கப்பட வில்லை.

இதுபோன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், மாவட்ட சத்துணவுப் பிரிவில் உள்ள உதவி கணக்கு அலுவலா் தனது தொழிற்சங்கத்தில் சேர எங்களை வலியுறுத்துகிறாா். எனவே, மாவட்ட ஆட்சியா் உணவு தயாரிப்பு செலவினத்தை உடனடியாக வழங்குவதுடன், உதவி கணக்கு அலுவலா் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com