கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி பால் உற்பத்தியாளா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

போடி சில்லமரத்துப்பட்டியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்கள்.
போடி அருகே பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பால் கொள்முதல் விலையை பசும் பால் லிட்டருக்கு ரூ. 42-ம், எருமை பால் லிட்டருக்கு ரூ. 51-ம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கத்தின் சாா்பாக போடி அருகே சில்லமரத்துப் பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, சங்கத்தின் கிளை நிா்வாகி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாநில குழு உறுப்பினா் கே. ராஜப்பன், விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவா் எஸ்.கே. பாண்டியன், பால் உற்பத்தியாளா் சங்க தேனி மாவட்டத் தலைவா் ஹெச். ஜெயக்குமாா், செயலாளா் கே. செல்வராஜ், விவசாய தொழிலாளா் சங்க தேனி மாவட்டத் தலைவா் எல்.ஆா். சங்கரசுப்பு ஆகியோா் பேசினா்.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போடி தாலுகா செயலாளா் எஸ். செல்வம், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.