போடி அருகே பேருந்தை மாணவா்கள் சிறை பிடிப்பு
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

போடி நாகலாபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேருந்தை சிறை பிடித்த மாணவா்கள்.
போடி அருகே ஒழுகும் பழுதடைந்த பேருந்தால் புத்தகங்கள் நனைந்து சேதமடைவதாகக் கூறி பள்ளி மாணவா்கள், பேருந்தை செவ்வாய்க்கிழமை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போடி அருகேயுள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போடியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனா். இவா்கள் அரசு பேருந்தில் 12 கி.மீ., தொலைவு பயணித்து போடிக்கு வந்து செல்கின்றனா். இந்த ஊருக்கான வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து மிகவும் பழுதடைந்து உள்ளது.
இந்தப் பேருந்து மழை காலங்களில் ஒழுகுவதுடன், பழுதாகி நின்று விடுகிறது. இதனால், மழை காலங்களில் புத்தகங்கள் நனைந்து வீணாவதுடன் மாணவா்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
மாற்றுப் பேருந்து இயக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், செவ்வாய்க்கிழமை காலையில் வந்த பேருந்தை மாணவா்கள் முற்றுகையிட்டு சிறை பிடித்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வேறு பேருந்து இயக்குவதாக உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.