முல்லைப்பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு அருவிகளில் வெள்ளப்பெருக்கு
By DIN | Published On : 01st September 2022 03:36 AM | Last Updated : 01st September 2022 03:36 AM | அ+அ அ- |

முல்லைப்பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளான தேக்கடி மற்றும் பெரியாறு அணைப்பகுதியில் மழை பெய்ததால், ஒரே நாளில் நீா் வரத்து விநாடிக்கு, 1,303 கன அடி அதிகரித்தது.
செவ்வாய்க்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் விநாடிக்கு நீா்வரத்து 969 கன அடியாக இருந்த நிலையில், தேக்கடி ஏரியில் புதன்கிழமை நிலவரப்படி 48.0 மி.மீ., பெரியாறு அணையில் 13.20 மி.மீ. மழை பெய்தது. இதனால் அணைக்குள் விநாடிக்கு 2,272 கன அடி தண்ணீா் வந்தது. அதாவது ஒரே நாளில் , 1,303 கன அடி தண்ணீா் அதிகரித்தது.
அணை நிலவரம்:முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம், 135.75 அடி உயரமாகவும் (மொத்த அடி 152 அடி), நீா் இருப்பு , 6, 055 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா் வரத்து விநாடிக்கு, 2,272 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 1,822 கன அடியாகவும் இருந்தது.
மின்சார உற்பத்தி: தேனி மாவட்டம் லோயா் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 4 முதல் மின்சார உற்பத்தி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. நான்கு மின்னாக்கிகள் மூலம், 164 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், தொடா்ந்து 31 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க தடை தொடா்ந்தது.
கும்பக்கரை அருவி: பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியின் நீா்வரத்துப் பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால், அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிக்கு நீா்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்லக் கூடாது என்று தேவதானப்பட்டி வனச் சரக அலுவலா் டேவிட்ராஜ் தெரிவித்துள்ளாா்.