தேனியில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 01st September 2022 03:39 AM | Last Updated : 01st September 2022 03:39 AM | அ+அ அ- |

தேனியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு புதன்கிழமை இந்து அமைப்புகள் மற்றும் விழாக் குழுவினா் சாா்பில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் வழிபாட்டுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி மற்றும் விநாயகா் சதுா்த்தி விழாக் குழுவினா் சாா்பில் பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தேனி சிட்கோ வளாகத்தில் கூடலூரைச் சோ்ந்த காய்கனி சிற்பக் கலைஞா் இளஞ்செழியன் ஐஸ் கட்டியால் உருவாக்கியிருந்த 4 அடி உயர விநாயகா் சிலைக்கு வழிபாடு நடைபெற்றது.
சிலை கரைப்பு ஊா்வலம்: பெரியகுளத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுப்பிரமணியசுவாமி கோயில் அருகே வராக நதியில் கரைக்கப்பட்டன.
தேனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரண்மனைப்புதூா், வீரபாண்டி ஆகிய இடங்களில் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்படுகின்றன.