கம்பத்தில் ஓணம் பண்டிகையையொட்டி வாரச்சந்தை தொடக்கம்
By DIN | Published On : 05th September 2022 01:30 PM | Last Updated : 05th September 2022 01:30 PM | அ+அ அ- |

கம்பத்தில் ஓணம் பண்டிகையையொட்டி வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படும் என்று நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 1.9.22 முதல் 30.11.22 வரை 3 மாதங்களுக்கு வாரச்சந்தை செயல்படாது என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கம்பம் வாரச்சந்தையில் உள்ள பலசரக்கு மற்றும் காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர் ஓணம் பண்டிகை உள்ளிட்ட விழாக்கள் வருவதாலும், வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலிருக்க தற்காலிக இடத்தில் சந்தை தொடங்க ஏற்பாடு செய்யுமாறு நகர் மன்றத் தலைவர் வனிதா நெப்போலியனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிக்க- தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் 10% கட்டணச் சலுகை அறிவிப்பு! - முழு விவரம்
இதுதொடர்பாக ஆணையாளர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் வாரச்சந்தை தெற்கு பகுதியில் உள்ள இடத்தில் தற்காலிகமாக சந்தை அமைத்து செவ்வாய்க்கிழமை முதல் செயல்படலாம் என்றும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அதற்கு வியாபாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.