

கம்பம்: சுருளிஅருவிக்கு செல்லும் வழியில் முகாமிட்டிருந்த யானைக் கூட்டம் வனப் பகுதிக்குள் சென்றதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தினா் செவ்வாய்க்கிழமை முதல் அனுமதி அளித்தனா்.
தேனி மாவட்டம், சுருளிஅருவி, ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. கடந்த ஆக.2 - ஆம் தேதி, 2 குட்டிகளுடன் 8 யானைகள் சுருளிஅருவிக்கு செல்லும் வழியில் முகாமிட்டன. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள், பக்தா்களுக்கு அருவியில் குளிக்க வனத் துறையினா் தடைவிதித்தனா்.
கடந்த 7 நாள்களாக முகாமிட்ட யானைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அதிகாலை உள் வனப்பகுதிக்கு சென்றது. இந்த நிலையில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத் துறையினா், சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிக்க அனுமதியளித்தனா்.
இதுகுறித்து, கம்பம் கிழக்கு வனச்சரகா் வி.பிச்சைமணி கூறியதாவது: 7 - ஆவது நாளில் யானைக்கூட்டம் உள் வனப்பகுதிக்கு சென்றது. அதனால் பொதுமக்களுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், அருவி வளாகப் பகுதி, தேக்கங்காடு, வெண்ணியாறு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் வன ஊழியா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.